

`அதிமுகவுடன் கூட்டணி தொடரு கிறது. தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 5 தொகுதிகள் கேட்கப்படும்’ என அக்கட்சியின் தலை வர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூ்ட்டம் நடைபெற்றது. ஜான்பாண்டியன் தலைமை வகித்தார். சிறையில்வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி தலைவராக அதன் நிறுவனர் ஜான்பாண்டியன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மாநில பொதுச்செயலாளராக பிரிசில்லா மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
செய்தியாளர்களிடம் ஜான்பாண்டியன் கூறியதாவது:
`தமிழகத்தில் 22 மாவட்டங்களில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வலுவாக உள்ளது. அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது. வரும் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 5 தொகுதிகளை ஒதுக்க அதிமுக தலைமையிடம் கேட்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்றார் அவர்.