

கும்பகோணம் மகாமகம் திருவிழாவுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. நகரின் மத்தியில் அமைந்துள்ள பெரிய குளத்தில் புனித நீராடி இறைவனை வழிபடுவது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாகும்.
தென்னகத்தின் கும்பமேளா என்றழைக்கப்படும் மகாமகம் திருவிழா வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று புனித நீராட நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள்.
எனவே, கும்பகோணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்த வேண்டும். மகாமகம் குளத்தைச் சுற்றி தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இது தவிர போக்குவரத்து வசதி, தங்குமிடங்கள், குடிநீர், கழிவறைகள், சுகாதார வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.