Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

கோடநாடு வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனது பதில் உரையில் திட்டவட்டம்

கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பேரவையில் காவல், தீயணைப்பு துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

இந்த ஆட்சியில் வன்முறைகள், சாதிச் சண்டைகள் இல்லை, மத மோதல்கள் , துப்பாக்கிச் சூடுகள், அராஜகங்கள் இல்லை. இதுதான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை. தமிழக மக்கள் அமைதியாக வாழ அடித்தளம் அமைத்துதந்துள்ளோம். அதற்கு காவல் துறைக்கு நன்றி.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆட்சி பொறுப்பேற்றதும் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி நியமிக்கப்பட்டு, வழக்கை விரைந்து நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையையும் விரைவாக முடிக்குமாறு கூறியுள்ளோம்.

புதிய ஆணையரகங்கள்

சென்னையில் ஆவடி, தாம்பரத்தை தலைமையிடமாக கொண்டுதனித்தனி புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும். அண்ணாபிறந்தநாளான செப்.15-ம் தேதி700 ஆயுள் கைதிகளை நல்லெண்ணஅடிப்படையில் முன்விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் தொகைக்கேற்ப 10 புதிய காவல் நிலையங்கள், 4 புதியதீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும். குற்றம் நடைபெற்றால் சாதி, மதம், இனம், மொழி, கட்சிபார்க்காமல் நடவடிக்கை எடுக்ககண்டிப்பான உத்தரவை காவல் துறைக்கு வழங்கியுள்ளேன்.

காவல் துறையில் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே 20 சதவீத முன்னுரிமை வழங்கப்படும். ஓய்வுபெற்ற காவலர், காவல் அதிகாரிகளுக்கு நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

1996-ம் ஆண்டு நேரடி எஸ்ஐக்களுக்கு, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில ஆவண காப்பகம் செயல்படவும், அறிக்கை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும். நிலுவையில் உள்ள சிறு தண்டனைகள் கைவிடப்படும். காவலர் முதல் ஆய்வாளர்வரை பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் பயணிக்க, நவீன அடையாள அட்டை வழங்கப்படும். காவல் துறையினர் உடற்பயிற்சி செய்ய 38 மாவட்டங்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும். பதவி உயர்வுக்கான கால வரம்பை ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைக்கப்படும். புதிதாக அமைக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் காவலர் அங்காடிகள் நிறுவப்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசும்போது, தமிழகத்தில் 4.64 லட்சம், சென்னையில் 2.50 லட்சம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டதாக கூறினார். ஆனால், 1.07 லட்சம் மட்டுமே பொருத்தப்பட்டது. இவற்றை பராமரிக்க தனி நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படும்.

விபத்து இறப்புகளை குறைப்பதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலம் என மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் தவறான தகவல் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.

கோடநாடு வழக்கை தொடர்ந்துநடத்துவோம். உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x