Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

சம வாய்ப்பு அளிப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்; சாதி தடைகளை அகற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

புதுச்சேரி அரசு பொறியியல்கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாகியுள்ளது. குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுநேற்று இப்பல்கலைக்கழகத்தைத்தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

புதுச்சேரியின் முதல் மாநில பல்கலைக்கழகம் இது. இதனால் அதிக கல்வி வாய்ப்புகள் உருவாவதுடன், புதிய படிப்புகளும் தொடங்கமுடியும். ‘ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான்’ திட்டத்தின்கீழ் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் முன்னேற்றத்துக்கு புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்க, கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்துவதுடன், தொழிற்சாலைகளுடன் அவர்களுக்கு உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும்.

நம் நாட்டில் 23 சதவீதத்தினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். அவர்களை மேம்படுத்தி வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். சுதந்திரத்துக்குப் பிறகு அனைவருக்கும் கல்வியறிவு அளிக்க திட்டம் கொண்டு வரப்பட்டும், தற்போதும் 20 சதவீத மக்கள் கல்வி கற்காத சூழலில் உள்ளனர். அனைவரும் கல்வியறிவு பெறும் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பாலினப் பாகுபாடு, சமூகத்தில் மக்களிடத்தில் பாகுபாடு ஆகியவை முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும். அனைவருக்கும் சமமான வாய்ப்பு தரப்பட வேண்டும். செயற்கையாக உருவாக்கப்பட்ட சாதி தடைகள் மற்றும் பாலினப் பாகுபாடுகளை இந்திய சமூகத்தில் இருந்து அகற்றுவதில் கல்வி நிறுவனங்கள் பங்கு வகிக்க வேண்டும்.

புதிதாக தொழில் தொடங்கும் இளையோருக்கான ‘இன்குபேசன்’ மையம் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் வர வேண்டும். அதிக எண்ணிக்கையில் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும்.

நம் நாட்டில் சுதந்திரப்போராட்ட தியாகிகளான அரவிந்தர், பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் வாழ்க்கையை இளையோர் தெரிந்து கொள்வது அவசியம். இது பாடநூலில் இடம் பெறவேண்டும். மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் நம் நாட்டு தியாகிகளின் விவரங்களைச் சேர்க்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, புதுவை கல்வி அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x