

தஞ்சாவூர் அருகே சிகரெட் தரதாமதமானதால் பெட்டிக் கடை பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதை கண்டித்த பேக்கரி கடை ஊழியர்களை தாக்கியதுடன், கடையில் இருந்த பொருட்களை திமுகவினர் அடித்து நொறுக்கினர். கிராம மக்கள் திருப்பித் தாக்கியதில் திமுகவைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி திமுக நகர இளைஞரணிச் செயலர் சுதாகர்(42), திமுக விவசாயத் தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் பாண்டவர்(54), மாணவரணி நகர துணைச் செயலர் முருகேசன்(48) உள்ளிட்ட திமுகவினர் 8 பேர், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு விருந்தில் கலந்து கொண்டுவிட்டு காரில் அன்று மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
வழியில், தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டையில் மன்னார்குடி - பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ள ரேவதி என்ற பெண்ணிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அந்தப் பெண் சிகரெட்டைஎடுத்துக் கொடுக்க தாமதம் ஆனதால், அவரை திமுகவினர் ஆபாசமாக பேசியதுடன், அவரது துப்பட்டாவை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, சத்தம் கேட்டு அருகில் உள்ள பேக்கரி கடை உரிமையாளர் ஆனந்தனின் மகன்வஸந்தன் (24) மற்றும் ஊழியர்கள், திமுகவினரை கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த திமுகவினர், அவர்களை தாக்கியதுடன், பேக்கரியில் இருந்த நாற்காலி, டேபிள், கண்ணாடி, இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். பின்னர், அங்கிருந்து காரில் ஏறி தப்ப முயன்றனர். தகவலறிந்து திரண்டு வந்த கிராம மக்கள் திமுகவினர் 6 பேரை மடக்கிப் பிடித்து, அவர்களை தாக்கினர். மேலும், 2 பேர் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் திமுக பிரமுகர்கள் சுதாகர், முருகேசன், பாண்டவர், இசையரசன், பிரபு,சுரேஷ் ஆகிய 6 பேர் படுகாயம்அடைந்தனர். இதேபோல, திமுகநிர்வாகிகள் தாக்கியதில், பெட்டிக் கடைக்காரர் ரேவதி, வஸந்தன், பேக்கரி ஊழியர்கள் திருப்பதி,பாஸ்கர், வாடிக்கையாளர் கார்த்திகேயன் ஆகியோர் காயமடைந்தனர். இருதரப்பினரையும் போலீஸார் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, ரேவதிஅளித்த புகாரின்பேரில், திமுக பிரமுகர்கள் 6 பேர் மீதும், திமுகநிர்வாகி பாண்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், சூரக்கோட்டையைச் சேர்ந்த 9 பேர் மீதும் தஞ்சாவூர் தாலுகா போலீஸார் தனித்தனியே இரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.