Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலை, லயன்ஸ் டவுன் பகுதிகளை சேர்ந்த மீனவ பெண்கள் மற்றும் சோரீஸ்புரம், அய்யனடைப்பு, மீளவிட்டான் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் தனித்தனியாக அளித்த மனுக்கள் விவரம்:

கடந்த 24 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு சமுதாய நலத் திட்டங்களை செய்து வந்தது. மீனவ மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மீன்பிடி வலைகள், ஐஸ் பாக்ஸ் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வந்தது. இந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் இருப்பதால், எங்களுக்கு நலதிட்ட உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டால் அதன் மூலம் எங்களது வாழ்வாதாரம் மேம்பட பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு மாவட்ட ஆட்சியர் ஆவன செய்ய வேண்டும்.

அடிப்படை வசதிகள் நிறுத்தம்

மீளவிட்டான், அய்யனடைப்பு, சோரீஸ்புரம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். தற்போது அவர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கிடைத்து வந்த நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கிராமங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x