Published : 10 Feb 2016 04:42 PM
Last Updated : 10 Feb 2016 04:42 PM

மருத்துவப் படிப்புகளில் பொது நுழைவுத் தேர்வு: வைகோ கடும் எதிர்ப்பு

சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிரான வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான முயற்சியில் மீண்டும் இறங்கி உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, 2011-ல் இத்தகைய பொது நுழைவுத் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டபோது, கடும் எதிர்ப்பு எழுந்தது. 2007-ல் தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உயர் நீதிமன்றமும், தமிழக அரசின் முடிவு சரிதான் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் இந்திய மருத்துவக் கழகம் (IMC) மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிற அமைச்சகங்களின் கருத்துக்களை கேட்பதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் இந்திய மருத்துவக் கழகத்தின் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் அடிப்படையில் இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்பதால் பிற கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், மாநிலங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையில் பிரச்சினை ஏற்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில், இரண்டு நீதிபதிகள் இந்திய மருத்துவக் கழகம் பொது நுழைவுத் தேர்வு நடத்தத் தேவையில்லை என்று தீர்ப்பு அளித்தனர்.

18.07.2013-ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்தமஸ் கபீர், விக்ரம்ஜித் சென் ஆகியோர் அளித்த தீர்ப்பில், “அகில இந்திய அளவில் மருத்துப்படிப்பில் மாணவர்களைச் சேர்க்க பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கழகத்திற்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பான அறிவிப்பு இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் 19, 25, 26, 29 மற்றும் 30 ஆகியவற்றை மீறுவதாக உள்ளது” என்று சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.

பாஜக அரசு சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிரான வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x