Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM

உருமாற்றம் அடையும் கரோனா வைரஸை கண்டறிய சென்னையில் புதிய ஆய்வகம்: முதல்வர் இன்று திறந்துவைக்கிறார்

இந்தியாவில் கரோனா வைரஸின் உருமாற்றத்தைக் கண்டறிய 10 ஆய்வகங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் ஒரு ஆய்வகம்கூட இல்லை.

உருமாறிய கரோனா வைரஸான டெல்டா பிளஸ்-ஐக் கண்டறிய, மாதிரிகள் பெங்களூரு அல்லது புனே ஆய்வகங்களுக்கு தற்போது அனுப்பப்படுகின்றன. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதால், தமிழகத்தில் உருமாற்றம் அடையும் கரோனா வைரஸைக் கண்டறியும் ஆய்வகம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடி செலவில் புதிய ஆய்வகம் அமைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய இந்த ஆய்வகத்தை இயக்குவதற்காக 6 பேர் கொண்ட குழுவினர், பெங்களூருவில் சிறப்பு பயிற்சி முடித்து, தயார் நிலையில் உள்ளனர். இவர்களுடன் பணிபுரிவதற்காக மேலும் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் 1,000 மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான திறன் இந்த ஆய்வகத்தில் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆய்வகத்தை இன்று திறந்துவைக்கிறார்.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x