Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM

பொன்னேரியை நகராட்சியாக்க மக்கள் எதிர்ப்பு: கிராமப்புற திட்டங்கள் கிடைக்காது என்பதால் அச்சம

பொன்னேரி

இரு ஊராட்சிகளை இணைத்து, பொன்னேரி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக சட்டப் பேரவையில் கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகத் துறைமானியக் கோரிக்கை மீதானவிவாதத்தின்போது, திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி, திருநின்றவூர் பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும், பூந்தமல்லி நகராட்சி விரிவாக்கம் செய்யப்படும் என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

அந்த அறிவிப்பின் விளைவாக,பொன்னேரி தேர்வுநிலை பேரூராட்சியுடன், அதன் அருகில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தடப்பெரும்பாக்கம், கொடூர் ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்து கேட்புக் கூட்டம் நேற்று பொன்னேரி, மூகாம்பிகை நகரில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கண்ணன், பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், “தடப்பெரும்பாக்கம், கொடூர் ஊராட்சிகளை பொன்னேரிபேரூராட்சியுடன் இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்தினால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள்உள்ளிட்ட கிராமப் புற திட்டங்கள் கிடைக்காமல் போகும். இதனால்,ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். சொத்துவரி அதிகரிக்கும்’’ எனக்கூறி, 2 ஊராட்சிகளை சேர்ந்தோர் தங்கள் ஊராட்சிகளை பொன்னேரி பேரூராட்சியுடன் இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொன்னேரி பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக மேற்கொள்ளாமல் நகராட்சியாக தரம் உயர்த்துவதா? என, கேள்வி எழுப்பினர்.

இறுதியாக பேசிய மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், “பொதுமக்களின் கருத்துகள் குறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும், 2 கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தி, பொன்னேரி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x