Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM

தமிழர்களை ‘திராவிடர்’ என குறிப்பிடக் கூடாது: நாம் தமிழர் கட்சி அரசியல் கருத்தரங்கில் தீர்மானம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பில், ‘சங்க காலம் தொட்டு இன்று வரை தமிழரா? திராவிடரா?’ என்ற தலைப்பில் அரசியல் கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம் ‘தமிழ்த் தேசியமும் தமிழர் நலனும்’ என்ற தலைப்பிலும், ‘தமிழரே இம்மண்ணின் பூர்வகுடிகள்’ என்ற தலைப்பில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் அ.வினோத்தும் உரையாற்றினர்.

அதைத் தொடர்ந்து, ‘தமிழர் என்ற தேசிய இனம்’ என்ற தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் நாச்சியாள் சுகந்தி, ‘சங்க கால தமிழர் வாழ்வியல்’ எனும் தலைப்பில் செம்மை மரபுப் பள்ளி, ஆசான் ம.செந்தமிழன் பேசினர்.

மதிய அமர்வில், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், ‘இந்தியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற தலைப்பிலும், தக்கார் மா.சோ.விக்டர், ‘தொல் தமிழர் வரலாறும், திராவிடமும்’ என்ற தலைப்பிலும், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், ‘திராவிடத்தின் வரலாற்று திரிபுகள்’ என்ற தலைப்பிலும் பேசினர்.

இறுதியாக, ‘திராவிடக் குழப்பவாதமும், தமிழ்த் தேசிய தீர்வும்’ என்ற தலைப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை நிகழ்த்தினார்.

கருத்தரங்கின் முடிவில், ஆரியத்துக்கு நேரெதிரான உளவியல் ஓட்டம் கொண்ட தமிழர்களை ஆரியச் சொல்லான ‘திராவிடர்’ எனக் குறிப்பிடுவதை முற்றாகக் கைவிட வேண்டும். இந்தியத் தொல்லியல் துறையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் சிந்து சமவெளி, கீழடி உள்ளிட்ட தமிழர் தொல்லியல் ஆய்வு முடிவுகளை திராவிட நாகரிகம் என்றோ, இந்திய நாகரிகம் என்றோ வெளியிடுவதையும் தவிர்த்து, தமிழர் நாகரிகம் என்றே அழைக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x