

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் சேவைப்பணிகள் வருங் காலங்களில் மேம்படும் என மடத்தின் அகில உலக துணைத் தலைவர் ஸ்ரீமத் கவுதமானந்த மஹராஜ் தெரிவித்தார்
தஞ்சாவூரில் உள்ள ராமகி ருஷ்ண மடத்தில் மடத்தின் அகில உலக துணைத் தலைவர் ஸ்ரீமத் கவுதமானந்த மஹராஜ் கடந்த 4 நாட்களாக தங்கியுள்ளார். அப்போது, பல்வேறு ஆன்மிகப் பணிகளை தொடங்கிவைத்தார். அதன் நிறைவு நாளான நேற்று ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தருக்கு சிறப்பு ஆராதனை செய்து பக்தர்களுக்கு மந்திர தீட்சை அளித்து ஆசியுரை வழங்கினார்.
அப்போது அவர் பேசியது: கலைகளின் தலைநகரமாக விளங் கும் தஞ்சையில் ராமகிருஷ்ண மடம் தொடங்கி ஓராண்டில் பல்வேறு சேவை பணிகளை செய்துள்ளது பாராட்டுக்குரியது.
தஞ்சாவூர் மட்டுமில்லாது நாகை, திருவாரூர், மயிலாடு துறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங் களிலும் சேவைப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
மடத்துக்கு பல பக்தர்கள் நேரடியாகவும் வந்து உறு துணையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கலைகளின் நகரமாகவும், ஆன்மிக நகரமாகவும் விளங்கும் தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடத்தின் சேவை பணிகள் வரும் காலங்களில் மேம்படும். சென்னை கிளை மடமாக இருந்த தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம், இனி கொல்கத்தாவின் பேலூரை தலைமையிடமாகக் கொண்டு நேரடி கிளை ஸ்தாபனமாக செயல் படும்.
நமது பண்பாடு, கலாச்சாரத்தை ஒவ்வொருவரும் கடைபிடித்து பெரியோர்களின் ஆசியுடன், தன்னம்பிக்கை உடையவர்களாக சத்தியம், தர்மம் வழியில் வாழ வேண்டும் என்றார்.
இதில் மூத்த துறவிகள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ராமகிருஷ்ண மடத்தின் துறவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.