

தமிழக இளைஞர்களுக்கு 100% வேலை கிடைக்கும் வகையில் அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் ஆக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக.13-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செப்.13) மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு, அத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலுரை அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, ''தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களை 100 சதவீதம் தேர்வு செய்யும் வகையில், அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படும்.
சமூகத்தில் பாலினச் சமத்துவம் முக்கியமானது என்பதை அரசு உணர்ந்துள்ளது. அதனால் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 வருவாய் மாவட்டங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்கள் 2.93 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
கரோனா காரணமாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடப்பது தாமதமானதால், நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும். அண்ணா மேலாண்மை நிலையத்தில் காட்சி ஊடகச் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகப் படப்பிடிப்புத் தளம் உருவாக்கப்படும்'' என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.