Published : 10 Feb 2016 03:58 PM
Last Updated : 10 Feb 2016 03:58 PM

திருமண நிதியுதவி வழங்குவதில் பாரபட்சம்: அரசு ஊழியர்களை வெளியேற்றி அலுவலகத்துக்கு பூட்டு- அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஆவேசம்

திருமண நிதியுதவி வழங்குவதில் பயனாளிகள் அலைக்கழிக்கப் படுவதாக குற்றஞ்சாட்டி, மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவு அலுவலரின் அறைக்கு அதிமுக மாவட்ட கவுன்சிலர் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு சார்பில் இளம் பெண்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை மூலம் திருமண நிதியுதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாதனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் திருமண நிதியுதவி கேட்டு சமூக நல விரிவு அலுவலகத்தில் விண் ணப்பித்திருந்தனர். அதில், 16 பேர் தவிர மீதமுள்ளவர்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமண உதவித் தொகை கிடைக்கப் பெறாதவர்கள், சமூக நல விரிவு அலுவலகத்தில் முறையிட்டனர். ஆனால், பல நாட்கள் கடந்தும், திருமண உதவித் தொகை வழங்குவதில் அரசு அலுவலர்கள் பாரபட்சம் காட்டுவதாகவும், பயனாளிகள் அலைக்கழிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ் சாட்டினர்.

இந்நிலையில், மாதனூரைச் சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர் அன்பரசுவிடம் திருமண உதவித் தொகை கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் நிலைமை குறித்து விளக்கினர்.

உடனே, பாதிக்கப்பட்ட பயனாளிகளுடன் மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவு அலுவலகத்துக்கு வந்த மாவட்ட கவுன்சிலர், அங்கு பணியில் இருந்த அரசு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரமடைந்த அன்பரசு, பணியில் இருந்த உதவி விரிவு அலுவலர் தன லட்சுமி உட்பட அங்கிருந்த அரசு ஊழியர்களை அறையை விட்டு வெளியேற்றிவிட்டு, சமூக நல விரிவு அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியம் ரெஜினா அங்கு வந்து அரசு ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர், மாதனூர் ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் அன்பரசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாவியை திருப்பித் தர அறிவுறுத்தினார்.

இதற்கிடையே, சமூக நல விரிவு அலுவலகத்துக்கு பூட்டுப் போட்ட விவரம் தெரியவந்ததும் திமுக ஒன்றிய கவுன்சிலர் இனியகுமார், கவுன்சிலர் ஜெயந்திமாலாவின் கணவர் முரளி ஆகியோர் அங்கு விரைந்து வந்து, அதிமுக கவுன்சிலர் அன்பரசுவின் செயல்பாட்டை கண்டித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீப் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அன்பரசுவிடம் இருந்து சாவி பெறப்பட்டு, சமூக நல விரிவு அலுவலகம் திறக்கப்பட்டது. இதனால், திருமண உதவிகேட்டு மனு கொடுக்க வந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x