

பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று மற்றும் வயிற்று வலி காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர், கடந்த மே 28-ம் தேதி 1 மாத கால பரோலில் தனது வீட்டுக்கு வந்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி அவர் கையெழுத்திட்டு வந்தார். வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்தார். ஜூன் மாதம் 28-ம் தேதி சிறைக்குத் திரும்ப இருந்த நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதேபோல, ஜூலை, ஆகஸ்ட் என 2 மாதங்களுக்கு பேரறிவாளனுக்கு பரோல் காலத்தை நீட்டித்துத் தமிழக அரசு உத்தரவிட்டது. செப்டம்பர் 28-ம் தேதி பரோல் முடிந்து அவர், சென்னை புழல் சிறைக்குத் திரும்ப இருந்தார்.
இந்நிலையில், சிறுநீரகத் தொற்று மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பேரறிவாளன், இன்று (செப்.13) காலை சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தனி வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் ஜோலார்பேட்டைக்கு பேரறிவாளன் அழைத்து வரப்படுவார் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.