அரசுப் பணியிடங்களில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும்: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: கோப்புப்படம்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: கோப்புப்படம்
Updated on
1 min read

அரசுப் பணியிடங்களில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக.13-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செப்.13) மனிதவள மேலாண்மை துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதற்கு, அத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்த பதிலுரையில், "மாற்றங்களை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும். ஏற்கெனவே இது 30 சதவீதமாக இருந்தது. இதற்குரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.

மேலும், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

போட்டித் தேர்வுகள் தாமதம் ஆனதால், நேரடி நியமனங்களில் வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும். தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in