Published : 13 Sep 2021 02:12 PM
Last Updated : 13 Sep 2021 02:12 PM

கோடநாடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி விசாரணைக்கு ஆஜர்

உதகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான ஜம்சீர் அலி.

உதகை

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட டுள்ள ஜம்சீர் அலி தனது வழக்கறிஞருடன் விசாரணைக்கு ஆஜரானார்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு கொள்ளை வழக்கு விசாரணையை போலீஸார் விரைவுப்படுத்தி வருகின்றனர். இந்த வழக்கின் 103 சாட்சிகளில் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது பல சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணை உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரிடம் மறு விசாரணை நடந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 10-வது நபரான ஜித்தின் ஜாயின் உறவினர் ஷாஜியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், வழக்கின் 40-வது சாட்சியான உயிரிழந்த கனகராஜின் நண்பர் குழந்தைவேலு, சிவன் மற்றும் ஈரோட்டை சேர்ந்த திருமூர்த்தி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று (செப். 13) காலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜம்சீர் அலி விசாரணைக்கு ஆஜரானார். தனது வழக்கறிஞர் செந்திலுடன் விசாரணைக்கு சென்றார்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் மற்றும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொலை - கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் வாளையார் மனோஜுக்கு கடந்த மாதம் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கிய நிலையில், வாளையார் மனோஜுக்கு ஜாமீனில் செல்ல யாரும் உத்தரவாதம் அளிக்கவில்லை. இதனால், அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார்.

நிபந்தனைகளை தளர்த்த கோரி, அவரது வழக்கறிஞர் முனிரத்னம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உதகை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனு நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி சஞ்சய்பாபா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x