

தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தலைமை செயற்குழு, பொதுக்குழு கூடி விரைவில் முடிவு எடுக்கப்படும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 81 படகுகளை யும், 27 மீனவர்களையும் இலங்கை அரசு பிடித்து வைத்துள் ளது. மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், இப்பிரச்சினை யில் மத்திய, மாநில அரசுகள் தலையிட கோரியும் வரும் 29-ம் தேதி மீனவர் அமைப்புகள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளனர். இந்த போராட்டத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். மத்தியில் பாஜக அரசு அமைந்த பின்னர் மாணவர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருகிறது. அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஒரே கொள்கையை கொண்டவை அல்ல. அதிமுக மதச்சார்பற்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இடம் பெற்றாலும், எங்கள் கட்சி சொந்த சின்னத்தில் போட்டியிட்டோம். அதேபோல் வரும் தேர்தலிலும் சொந்த சின்னத்தில் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.