கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக.13-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செப்.13) நகைக் கடன் தள்ளுபடி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
"கடந்த ஆட்சிக் காலத்தில் 2,42,743 நபர்களுக்கு 2,749 கோடியே 10 லட்ச ரூபாய் தவறாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. நகைக் கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நகைக் கடன் ஒவ்வொன்றையும் விரிவான மற்றும் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார்.
அதன்படி, அனைத்து நகைக் கடன் பற்றிய முழு புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டு, கடந்த ஒரு மாத காலமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஒரு குடும்பத்தில் 5 சவரனுக்குக் கீழான நகைக் கடன் பெற்ற சரியான, தகுதியான நபர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இதற்காக, கடன் பெற்றவர்கள் விவரம், கூட்டுறவு வங்கி, ஆதார் எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்தத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்ததில், பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நகைக் கடன் தள்ளுபடியில் ஏழை, எளிய மக்கள் மட்டுமே பயன்பெற வேண்டும் என இந்த அரசு கருதுகிறது. எனவே, 5 சவரனுக்குக் குறைவாக நகைக் கடன் பெற்றவர்களில், சில நேர்வுகளில் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய அவசியமில்லை எனக் கருதப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, 2021ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன்பெற்றவர்கள் ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள். ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ, ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களிலிருந்தோ, ஒன்றுக்கு மேற்பட்ட கடன்கள் மூலம், 5 சவரனுக்கு மேல், நகைகளின் அடிப்படையில் கடன் பெற்றவர்கள், தவறான முறையில் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தி நகைக் கடன் பெற்றவர்கள், இதுபோன்ற மேலும் சில நேர்வுகளில் வழங்கப்பட்ட நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய இயலாது.
இது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறையைக் கூட்டுறவுத்துறை ஓரிரு நாளில் வெளியிடும். இந்த அறிவிப்பு வந்ததும் முறையற்ற வகையில் நகைக் கடன்களைப் பெற்றுத் தள்ளுபடி செய்ய முற்பட்டதும் சில மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
நகைக் கடன் தள்ளுபடியால் அரசுக்கு ரூ.6,000 கோடி செலவாகும். ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் கூட்டுறவுத் துறை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். கணினிமயமாக்கப்பட்டு நவீனத்துடன் கூட்டுறவுத்துறை செயல்படும்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
