

மாநில அரசின் வருவாயை மட்டும் பயன்படுத்தி திட்டங்களை செயல்படுத்தினால், தமிழகம் பின்தங்கிவிடும் என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இடைக் கால பட்ஜெட் மீதான விவாதத் துக்கு பதிலளித்து அவர் நேற்று பேசியதாவது:
ஒரு ஆட்சியை நடத்துவது என்பது மிகவும் கடினமான பணி. அது கூர்மையான கத்தியின்மேல் நடப்பதற்கு சமம். நாளுக்கு நாள் மக்களின் எதிர்பார்ப்புகள் பெருகிக் கொண்டே போகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் நிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரங்களை திரட்டுவதும் மிக கடினம்.
மாநிலத்தின் வரிவருவாய், மத்திய அரசைக் காட்டிலும் மிகக் குறைவு. மக்களின் எதிர்பார்ப்பு ஒருபுறம்; மறுபுறம் அரசு அலுவலர் கள் கூடுதல் சம்பளம் கேட்டும், மத்திய அரசுக்கு இணையான சம்பளம் கேட்டும் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பொதுமக்களின் அடிப்படை தேவையான அத்திக்கடவு - அவிநாசி போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட வேண்டும். அதற்கும் நிதி தேவை.
வருவாயைக் கூட்ட வரியை ஏற்றுவதும் சரியாகாது. அதே நேரம் மக்களின் கோரிக்கைகளை யும் நிறைவேற்ற வேண்டும். எனவே, கிடைக்கும் நிதி ஆதாரத் துடன் கடன் மூலம் நிதி திரட்டி அவற்றை முக்கியப் பணிகளுக்கு செலவிடுவது அவசியமாகிறது. மாநில வருவாயை மட்டும் பயன் படுத்தி திட்டங்களை செயல்படுத் தினால் மின்சாரம், சாலை உள் ளிட்ட கட்டமைப்பு வசதிகளை பெருக்க இன்னும் 20 ஆண்டு களோ அதற்கு மேலோ காத்திருக்க வேண்டி வரும். இதனால் தமிழகம் பின்தங்க வாய்ப்புள்ளது.
2016-17 இடைக்கால பட்ஜெட் டில் வருவாய் வரவு ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 4 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் வரி, வருவாய் போன்ற சொந்த நிதி ஆதாரம் 69.62 சதவீதம். மத்திய அரசின் உதவிகள், நிதிப்பகிர்வு 30.38 சதவீதம் மட்டுமே. வருவாய் செலவினம் ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 159 கோடி. இதில் சம்பளத்துக்கு ரூ.47 ஆயிரத்து 262 கோடியும், ஓய்வூதியத்துக்கு ரூ.19 ஆயிரத்து 841 கோடியும், நிர்வாக பராமரிப்புக்கு ரூ.5 ஆயிரத்து 774 கோடியும் என வருவாயில் 47.94 சதவீதம் செலவிடப்படுகிறது.
சம்பள செலவு கூடினால் மக் களுக்கு செயல்படுத்தப்படும் திட் டச் செலவை குறைக்க வேண்டும் அல்லது வரிச்சுமையை மக்க ளிடம் திணிக்க வேண்டும். மொத்த வரிவருவாயில் 14.02 சதவீதம் வட்டி போக மீதம் 38.04 சதவீதம் மக்கள் நல திட்டங்களுக்காக வழங்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி மாறி மாறி வரும் சுழற்சி யில் வருவாய் பற்றாக்குறையே இல்லாமல் ஒரு அரசு தொடர்ந்து செயல்பட முடியாது. வருவாய் செலவில் உள்ள திட்டங்களை எல்லாம் இலவசம் என தள்ளிவிட முடியாது. மேலும், வருவாய்ப் பற்றாக்குறை என்ற ஒரு அளவுகோலை மட்டும் வைத்துக் கொண்டு மாநில அரசின் நிதி நிலையை மதிப்பிட முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.