

மேடைகளையும், பொதுக்கூட்டங்களையும் உணர்வுபூர்வ பேச்சுகளால் ஆக்கிரமித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, கோவை பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து எதுவுமே பேசாதது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
கோவை கொடிசியா திடலில் செவ்வாய்க்கிழமை பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தலித் உரிமை, இளைஞர் எழுச்சி, மேக் இன் இந்தியா, இட ஒதுக்கீடு என பல்வேறு விதமாக தன் பேச்சை எடுத்துச் சென்றாலும், தமிழக தேர்தல் பற்றியோ அல்லது திராவிடக் கட்சிகள் குறித்தோ எதையும் பேசவில்லை.
ஆனால், மேடையை ஆக்கிரமித்த இல.கணேசன், வானதி ஸ்ரீநிவாசன், முரளிதர் ராவ் என மற்ற தலைவர்கள் அனைவரும் 1967-ல் இருந்து தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி மோசமான ஆட்சியையே செலுத்தியிருக்கின்றனர் என விமர்சித்தனர்.
பிரதமரின் பேச்சு குறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "2014-க்குப் பின்னர் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட மத்திய திட்டங்கள் குறித்து பிரதமர் இன்னும் விரிவாக பேசியிருக்கலாம். ஆனாலும் மாநிலக் கட்சிகள் குறித்த அவரது மவுனம் எதிர்பார்த்ததே.
பிரதமர் பதவிக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. அத்தகைய பதவியில் இருப்பவர் செல்லும் இடமெல்லாம் தனிநபர் விமர்சனங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கக் கூடாது. காங்கிரஸ் கட்சியை விமர்சித்தபோதுகூட அவர் தனிநபர் யாரையும் தாக்கிப் பேசியதில்லை. அது அவரது பாணி. அதுவே அவரது கலாச்சாரமும்கூட" என்றார்.
ஆனால் அரசியல் விமர்சகர்கள் மோடியின் மவுனத்தை வேறு மாதிரியாக பார்க்கின்றனர். மோடியின் மவுனம் திட்டமிட்ட வியூகம் என்கின்றனர்.
அரசியல் விமர்சகர் ஆர்.மணி கூறும்போது, "மோடி தமிழக தேர்தல் குறித்தும், திராவிடக் கட்சிகள் குறித்தும் எவ்வித விமர்சனத்தையும் முன்வைக்காததற்கு தேர்தல் கூட்டணி வாய்ப்பை எல்லா கட்சிகளுக்கு பாஜக இன்னும் திறந்துவைத்திருக்கிறது என்பதை உணர்த்துவதற்காககூட இருக்கலாம்.
பிரதமர் மவுனத்துக்கு விளக்கம் கூறும் வகையிலேயே சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டரில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டால் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்" என்றார்.
அவர் மேலும் கூறும்போது, "பிரதமர் மோடி விரும்பத்தகாத தனிநபர் விமர்சனங்களை முன்வைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதற்காக அவர் தமிழக தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான அடிப்படை திட்டங்கள் குறித்துகூட பேசாமல் சென்றது சந்தேகத்தை எழுப்புகிறது. தேர்தல் பொதுக்கூட்டம் என கோவை கூட்டத்தை விளம்பரப்படுத்திவிட்டு தேர்தல் குறித்து எதுவுமே பேசாததன் பின்னணியில் ஒரு சாதுர்யம் ஒளிந்திருக்கிறது" என்றார்.
தமிழில்:பாரதி ஆனந்த்