

தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், நேற்று சென்னை திரும்பினர். மக்களின் தேவைக்கு ஏற்ப, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 700-க்கும் மேற்பட்ட சிறப்புபேருந்துகள் இயக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியோடு (வெள்ளி), சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், சென்னையில் இருந்து சுமார் 1.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். 3 நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில், நேற்று மதியம் முதல் மக்கள் மீண்டும் சென்னைக்கு வரத் தொடங்கினர். இதனால், நேற்று மாலை முதல் நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது.
போக்குவரத்து நெரிசல்
மக்களின் தேவைக்கு ஏற்ப திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, கடலூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒரே நேரத்தில் வாகனங்கள் குவிந்ததால் சென்னை மற்றும் புறநகர் நுழைவு பகுதிகளான பெருங்களத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு இந்த தொடர் விடுமுறையில் அதிகமான மக்கள் அரசு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். விடுமுறை முடிந்துள்ள நிலையில் சென்னைக்கு மீண்டும்மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். மக்களின் தேவைக்கு ஏற்ப,பல்வேறு மாவட்டங்களில் இருந்துசென்னைக்கு 700-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறோம். தேவைக்கு ஏற்றார்போல, பேருந்துகளை வரிசையாக இயக்க போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு அலுவலர்களையும் நியமித்துள்ளோம்’’ என்றனர்.