Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM

மக்கள் ஒத்துழைப்பால் ‘மெகா’ தடுப்பூசி முகாம் மாபெரும் வெற்றி: தமிழக அரசு தலைமைச் செயலர் வெ.இறையன்பு பெருமிதம்

பொதுமக்கள், அதிகாரிகள், அலுவலர்கள் ஒத்துழைப்பால் `மெகா தடுப்பூசி முகாம்' மாபெரும் வெற்றிபெற்றுள்ளதாகவும், வாரந்தோறும்இதுபோன்ற முகாமை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தாகவும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்தார்.

கரோனா பரவல் 3-ம் அலையைத்தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அண்டை மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், எல்லையோர மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது.

கேரள எல்லையோரத்தில் உள்ள9 மாவட்டங்கள் உட்பட, தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிபோட அரசு முடிவெடுத்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலர் வெ.இறையன்பு நடத்திய மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆகியவை இந்த முகாமுக்கு செயல் வடிவம் கொடுத்தன. இதனால், மெகாதடுப்பூசி முகாம் நேற்று வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற 5 முகாம்களை தலைமைச் செயலர் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர்`இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதுதான் இந்த முகாமின் இலக்காகும். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பல இடங்களில் தடுப்பூசி தீர்ந்துவிட்ட நிலையும் ஏற்பட்டுள்ளது.

வாரந்தோறும் இதுபோன்ற முகாம்களை நடத்தி, பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடுவதே அடுத்தகட்ட இலக்காகும். போலியோ தடுப்பூசி முகாம்களை மாதிரியாகக் கொண்டு, கரோனா தடுப்பூசி முகாமுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

உள்ளூர்வாசிகள், மக்கள் பிரதிநிதிகள், சேவை நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் சங்கங்களுடன் இணைந்து, இந்த முகாம்களுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்திருந்தனர்.

சேலம் மாவட்ட ஆட்சியருடன் நான் பேசும்போது, இந்த முகாம் திருவிழாபோல நடைபெற்றதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, கிராமப் பகுதிகளில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது. பொதுமக்களும் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.

மக்களிடம் பெரிய அளவில்விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் அரசின் நோக்கம். தடுப்பூசி விஷயத்தில் யாரையும் வற்புறுத்தவில்லை. அவர்களாகவே வந்துதடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். பல ஊர்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு, மக்கள் வரவேற்பு உள்ளது.

நான் 5 இடங்களில் முகாம்களைப் பார்வையிட்டேன். அதிக அளவில் இளம் தலைமுறையினர் வந்திருந்தனர். இதுதவிர, புலம்பெயர் தொழிலாளர்களும் அதிகம் வந்தனர். ஓரிடத்தில் முழுவதுமாக ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தனர். மொத்தத்தில் இந்த முகாம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

பத்திரிகை, மின்னணு ஊடக விளம்பரங்கள், ஆட்டோ பிரச்சாரம்உள்ளிட்டவை மூலம், சிறிய ஊர்களிலும்கூட அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மாலை 3 மணியிலேயே 17 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டு விட்டது. சிலமாவட்டங்களில் தடுப்பூசி இருப்பு முழுவதுமாக காலி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிக அளவில்இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அக்டோபருக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசியை போட வேண்டும் என்றஇலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

அதிகாரிகள் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தமுகாம்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டது, மக்கள் மத்தியில் இன்னும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தினமும் 5, 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இருப்பு அடிப்படையில் வாரந்தோறும் மெகா முகாம்நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு தலைமைச் செயலர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x