

இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஈர்ப்பு அதிகரித்து வருவதால் தற்போது விவசாயிகளின் பார்வை இயற்கை விவசாயம் பக்கம் திரும்பியுள்ளது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள பாப்பம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி செ.நல்லசிவம் (57) என்பவர் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி கரும்பு சாகுபடி செய்துள்ளார். பெரும்பாலும் காய்கறி மற்றும் கீரை வகைகளை மட்டுமே இயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் நிலையில் 12 மாத பயிரான கரும்பை விவசாயி நல்லசிவம் இயற்கை உரங்களின் மூலம் உற்பத்தி செய்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயி நல்லசிவம் கூறியதாவது:
நான் மற்றும் எனது மனைவி கிருஷ்ணவேணி பாப்பம்பாளையம் ஊராட்சித் தலைவராக இருந்துள்ளோம். எனினும், விவசாயம் எங்களது அடிப்படைத் தொழில். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட்டை வலியுறுத்தும் இயற்கை விவசாயி சுபாஷ் பாலேக்கர், நம்மாழ்வார் ஆகியோரின் பேச்சுகள் என்னை கவர்ந்தன. அதனால், ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு இயற்கை விவசாயத்தை தொடங்கினேன். மொத்தம் 7.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் ஆறரை ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளேன். இது முற்றிலுமாக இயற்கை உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்படுகிறது.
பஞ்சகாவ்யம், மாட்டுசாணம், கோமியம் மூலம் தயாரிக்கப்படும் ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், மீன் அமிலம் மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கரும்பு சாகுபடி செய்கிறேன்.
எந்த விதமான ரசாயனஉரங்களையும் பயன்படுத்துவ தில்லை. இயற்கை உரங்களை தயாரிக்க ஒரு மாத காலம் பிடிக்கும். எனினும், இயற்கை உரங்களால் மண் வளம் கெடாது என்பதால்சிரமங்களை பொருட்படுத்துவதில்லை.
இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கரும்பு நல்ல தடிமனாக இருக்கிறது. மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்தால் அரசு ஒரு டன் கரும்புக்கு வழங்கும் விலையைக் காட்டிலும் இரு மடங்கு லாபம் ஈட்ட முடியும்.
இயற்கை விவசாயம் குறித்து கிராமங்களில் பயிற்சியும் அளித்து வருகிறேன். இயற்கை உரங்கள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களுக்காக நாட்டுப் பசுமாடு, ஆடு, கோழி உள்ளிட் டவை வளர்க்கப்படுகிறது.
இயற்கை விவசாயத்திற்கு அங்ககக் சான்று பெறுவதற்காக விண்ணப்பம் செய்துள்ளேன். நாமக்கல் விதைச்சான்று அலுவலக அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். மூன்றாண்டில் இந்தச் சான்றிதழ் கிடைத்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.