Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM

தாம்பரம் மாநகராட்சிக்கு அரசாணை வெளியீடு: முதல்கட்டமாக 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மட்டுமே இணைப்பு

சென்னை

தாம்பரம் மாநகராட்சி குறித்த அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள், சிட்லபாக்கம் உள்ளி்ட்ட 5 பேரூராட்சிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன.

தாம்பரத்தை மையமாகக் கொண்டு அருகில் உள்ள பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சியை உருவாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நகராட்சி நி்ர்வாக மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் கே.என்.நேரு, “தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சி அமைக்கப்படும்” என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின் அடிப்படையில், புதிய மாநகராட்சி குறித்த அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிய மாநகராட்சியை உருவாக்குவது குறித்த செங்கல்பட்டு ஆட்சியர் செயல்குறிப்பில், தாம்பரத்துடன் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளை இணைக்கவும், கூடுதலாக 15 கிராம ஊராட்சிகளையும் இணைக்கவும் தீ்ர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தவிர, தாம்பரம் நகராட்சி எல்லையை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தாம்பரம் நகராட்சிக்கு சமமாக வளர்ந்து வருகின்றன. எனவே, தாம்பரம் நகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளான குடிநீ்ர், பாதாள சாக்கடை போன்றவற்றை விரிவுபடுத்த வேண்டியது அவசியம். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இணைந்துள்ளதால், அதற்கு ஈடாக தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டியது அவசியம்” என்றும் செங்கல்பட்டு ஆட்சியர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொகை, பரப்பளவு

தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள், சிட்லபாக்கம் உள்ளிட்ட 5 பேரூராட்சிகளின் மொத்த பரப்பு 87.64 சதுர கிமீ ஆகும். மொத்த மக்கள் தொகை 9.60,887, வருவாய் ரூ.303.93 கோடியாகும் என்று தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் செயல்குறிப்பு அடிப்படையில் நகராட்சி நிர்வாக இயக்குநரின் பரிந்துரை அடிப்படையில் தாம்பரம் மாநகராட்சியை உருவாக்கும் பொருட்டு, தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீ்ர்மலை பேரூராட்சிகள் இணைக்கப்படலாம் என்று உத்தேச முடிவெடுத்து அதன்படி உத்தரவிடப்படுகிறது. இதற்கேற்ப, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது நகராட்சிகள், பேரூராட்சிகள் மட்டும் சேர்க்கப்படும் நிலையில், ஊராட்சிகள் சேர்க்கப்படவில்லை. இந்த ஊராட்சிகளில் தற்போது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்ததும், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x