

சேலத்தில் விரைவில் பயிற்சி மையம் அமைத்து கிராமத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு உயரம் தாண்டுதலில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டு உள்ளேன் என்று பாராலிம்பிக்கில், வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர் மாரியப்பனுக்கு, சேலம் மாவட்ட எல்லையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கத்துடன் தாயகம் திரும்பிய மாரியப்பன் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், பதக்கம் வென்ற பின்னர் முதன்முறையாக சொந்த ஊரான சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்துள்ள பெரிய வடகம்பட்டிக்கு நேற்று வந்தார். பெங்களூரில் இருந்து காரில் வந்த மாரியப்பனுக்கு, சேலம் மாவட்ட எல்லையான தீவட்டிபட்டியில் , தாரை தப்பட்டைகள் முழங்க, மலர்களை தூவியும் பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, பொன்னாடை போர்த்தி, கிரீடம் அணிவித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் ஆகியோரும் மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, மாரியப்பனுக்கு அவரது தாய் சரோஜா ஆரத்தி எடுத்து வரவேற்புக் கொடுத்தார். அவருடன், மாரியப்பனின் மனைவி ரோஜா, சகோதரி மூத்த சகோதரி சுதா, சகோதரர்கள் குமார், கோபி ஆகியோரும் வந்திருந்தனர்.
பின்னர் மாரியப்பனுக்கு மாலையும் அணிவித்து, ஊர் மக்கள் அவரை தோளில் உட்கார வைத்து அலங்கரிக்கப்பட்ட அவரது ஜீப்புக்கு தூக்கி சென்றனர். பின்னர் ஜீப்பில் என்றபடி அவரது வீட்டுக்கு சென்ற மாரியப்பனுக்கு, வழி நெடுக மக்கள் திரண்டு நின்று உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர். பலர் மாரியப்பனுக்கு கைகொடுத்து, செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் மாரியப்பன் கூறியதாவது:
பாராலிம்பிக் போட்டியில் நாட்டுக்காக பங்கேற்று, மீண்டும் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. . கடந்த முறை பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று நிலையில் தற்போது வெள்ளிப் பதக்கம் பெற்றது சற்று கவலையை ஏற்படுத்தியது. எனது தாயாருக்கும் நான் தங்கப் பதக்கம் பெறவில்லை என்பது வருத்தம் ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும், நாட்டுக்காக மீண்டும் பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன். பிரதமரையும் தமிழக முதல்வரையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கிராமங்களில் இருந்து பெரும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி வாழ்த்து தெரிவித்தனர். விரைவில்,சேலத்தில் பயிற்சி மையம் ஆரம்பித்து, கிராமப்புறத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளேன். மக்களுக்கு எனது வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்றார்.