

தமிழகத்தில் இன்று (செப்.12) காலை தொடங்கி நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 12-ம் தேதி (இன்று) மெகா தடுப்பூசி முகாம்களை நடத்துவதாக தமிழக அரசு அறிவித்தது. குறிப்பாக, கேரளா எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் 40ஆயிரம் மையங்களில் கரோனாதடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன.
வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும்நகர), கல்வித்துறை, யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும்பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் தடுப்பூசி பணிகளில் ஈடுபடுகின்றன. காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ம்தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை, 3.5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. விரைவில் 4 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மெகா தடுப்பூசி முகாமுக்கு ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இன்று, முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.