

நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் மாணவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற உதயநிதி ஸ்டாலின் சேலம் புறப்பட்டுச் சென்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று (செப்.12) கலந்துகொண்டார்.
கறம்பக்குடி அருகே வாணக்கன்காட்டில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர், கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் வரவேற்புரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தி பேச இருந்தனர்.
அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு போன் வந்தது. அதன்பிறகு, தான் அவசரமாக கிளம்ப இருப்பதாக கூறி மணமக்களை உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.
அப்போது, "நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் வீட்டுக்குச் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுமாறு திமுக தலைவர் அறிவுறுத்தியுள்ளதால் அங்கு சாலை மார்க்கமாக புறப்படுகிறேன்" என்று கூறியதோடு அங்கு புறப்பட்டுச் சென்றார்.
இதனால், அங்கு திமுக சார்பில் நடப்பட்டிருந்த கட்சிக் கொடியைக்கூட ஏற்றாமல் அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்றார்.