Published : 12 Sep 2021 02:02 PM
Last Updated : 12 Sep 2021 02:02 PM

மாணவர்கள் யாரும் விபரீத முடிவெடுக்க வேண்டாம்; நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்குகிறது: முதல்வர் ஸ்டாலின்

மாணவர் தனுஷ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''நீட் தேர்வு அச்சம் காரணமாகத் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி - அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சிபெற முடியாத அளவுக்குக் கிராமப்புற - நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களைப் புரிந்துகொள்ளாத மத்திய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வரவேண்டிய மாணவ - மாணவிகள் தற்கொலைக்குக் காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது.

நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ - மாணவிகள் தற்கொலைகளும் மத்திய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடைய வைக்கிறது.

இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்குப் பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாக் கருதி அனைத்து மாநில முதல்வர்களின் கவனத்துக்கும் கொண்டுசென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மாணவச் செல்வங்கள் மனம் தளரவேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத்தரும் பெரும் பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து, நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்''.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x