

மாணவன் தனுஷை மரணக் குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் கூழையூரைச் சேர்ந்த மெஷின் ஆப்பரேட்டர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் (19). ஏற்கெனவே 2019-ல் இருந்து நீட் தேர்வை எழுதி வருகிறார். இதில் பல் மருத்துவத்துக்கு இடம் கிடைத்தபோதும் எம்பிபிஎஸ்தான் படிக்கவேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார். இதனால் மீண்டும் தேர்வை எழுத முடிவெடுத்துப் படித்து வந்துள்ளார்.
2 முறை நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தனுஷ் இருந்துள்ளார். இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர் தனுஷ், தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''அச்சம் விலக்கி, நம்பிக்கையூட்டி, நீட் தேர்வுக்குத் தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக் குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?
ரகசியம் வைத்திருப்பதாகச் சொன்னீர்களே, அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?'' என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.