Published : 12 Sep 2021 12:53 PM
Last Updated : 12 Sep 2021 12:53 PM

திமுக எங்களுக்கு கொடுத்த தொல்லைகளை ‘தலைவி’ படத்தில் காட்டவில்லை - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

‘தலைவி’ படத்தில் சொல்லப்படும் சில விஷயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் சொல்லப்படும் சில விஷயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ‘தலைவி’ படத்தின் முதல்நாள் முதல் காட்சியைப் பார்த்த ஜெயக்குமார் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புரட்சித் தலைவரை பொறுத்தவரை அவர் எப்போதுமே பதவிகளுக்கு ஆசைப்பட்டது கிடையாது. 1967ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் குண்டடிப் பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது புகைப்படத்தை போஸ்டரில் அச்சடித்ததன் மூலம் அண்ணா தலைமையிலான திமுக மாபெரும் வெற்றி பெற்ற ஆட்சியில் அமர்ந்தது. எம்.ஜி.ஆரால் கிடைத்த வெற்றி என்பதால் அவருக்கு ஏதேனும் ஒரு மந்திரி பதவி கொடுப்பதற்காக பேரறிஞர் அண்ணா அவரை அணுகியபோது எம்.ஜி.ஆர் அதனை மறுத்துவிட்டார். ஆனால் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர் தனக்கு மந்திரி பதவி கேட்டது போலவும் அதற்கு கருணாநிதி மறுப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அது உண்மை அல்ல.

அதே போல எம்.ஜி.ஆர் என்றைக்குமே ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தியதில்லை. ஆனால் திரைப்படத்தில் அப்படி ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. படத்தில் எங்கள் கட்சிக்கு திமுக கொடுத்த தொல்லைகள் எதுவும் இடம்பெறவில்லை. இது போன்ற காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x