

கரூர் மாவட்டத்தில் இன்று (செப்.12-ம் தேதி) 540 இடங்களில் நடைபெறும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் 50,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தாந்தோணிமலை அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் நடந்த தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ’’கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 50,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று நடைபெறுகிறது. இதற்காக ஊரகப் பகுதிகளில் 417, நகர, பேரூராட்சிப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள், மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த நடமாடும் முகாம்கள் மேலும் தொழிற்சாலைகளில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. கரூர் மாவட்டத்தில் 57 சதவீதம் பேர் ஒரு தடுப்பூசியேனும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
இன்று 50,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கடந்த 3 நாட்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்குத் தேர்தலின்போது பூத் ஸ்லிப் வழங்குவதுபோல அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் இடம் அடங்கிய விவரங்களுடன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 9,03,245 லட்சம் பேர் உள்ளனர். இதில் 5,23,042 பேர் என 57 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் இரு தவணைகளும் செலுத்தி உள்ளவர்கள் 1,13,742, முதல் தவணை மட்டும் செலுத்தியுள்ளவர்கள் 4,09,300. மீதமுள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். இதில் ஒரே நாளில் 50,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
கரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முகாமில், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவர் முதல் தவணை கடந்த ஜூலை 31-ம் தேதி செலுத்தியதாகத் தெரிவிக்கவே, அவரை 84 நாட்கள் கழித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவர்கள் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியிருந்தால் அதனைச் சோதித்த 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார், கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, கரூர் நகர் நல அலுவலர் லட்சியவர்னா, கரூர் வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் வெங்கமேடு, மின்னாம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.
மின்னாம்பள்ளி அரசுப் பள்ளியில் நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கரூர் அருகேயுள்ள ஆண்டாங்கோவிலில் இன்று இசைக் கருவிகள் முழங்க தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அங்கு முகாம் நடைபெறும் பள்ளியில் பொதுமக்களை வரவேற்கும் வகையில் வாழை மரங்கள் கட்டப்பட்டன.