Published : 12 Sep 2021 03:19 AM
Last Updated : 12 Sep 2021 03:19 AM

நீட் தேர்வுக்கு எதிராக பேரவையில் நாளை தீர்மானம்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் நாளை தீர்மானம் கொண்டுவர உள்ளார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தடுப்பூசி மட்டுமே கரோனா தொற்றை தடுக்க ஒரே தீர்வு என அனைவரும் உணர்ந்து இருக்கிறோம். தடுப்பூசி 2 தவணையும் செலுத்திக்கொண்டால் 97.5 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும் என்று டெல்லியில் உள்ள உயர் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று 40 ஆயிரம் தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் வாரத்துக்கு ஒரு மெகா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, முதல்கட்ட மெகா தடுப்பூசி முகாம் அனைத்து மாவட்டங்களிலும் செப்டம்பர் 12-ம் தேதி (இன்று) நடைபெறுகிறது. இதன்மூலம், 40 ஆயிரம் தடுப்பூசி முகாம்களில் 20 லட்சம் பேருக்குதடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த மாதம் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இதுவரை இத்திட்டத்தில் 4.07 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். இதன்மூலம் தினமும் 12 ஆயிரம் பேர் பயனடைகின்றனர்.

தமிழக அரசு விரும்பாத ஒரு நிகழ்வாகத்தான் நீட் தேர்வு நடக்கிறது. சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரின் இறுதி நாளான செப்டம்பர் 13-ம் தேதி (நாளை) நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் முதல்வரால் கொண்டுவரப்பட இருக்கிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதுபோல, அந்த தீர்மானத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, போதுமான அளவுக்கு அழுத்தமும், வலியுறுத்தலும் தந்து, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முதல்வர் கட்டாயம் விலக்கு பெற்றுத் தருவார்.

நீட் தேர்வில் கடந்த முறை நடந்தது போல, மிக கடுமையான போக்கை காட்டி, மாணவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்காமல் இந்த முறை, மிகமென்மையான போக்கிலே இத்தேர்வு நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x