

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை மகாகவி நாளாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. வேளாண்மை சட்டங்களால் யாரும் இதுவரை பாதிப்படைந்ததாகக் கூறவில்லை. தமிழகம், பிஹாரில் மண்டி வைத்து வியாபாரம் செய்வதால் வேளாண்மை சட்டங்களை எதிர்க்கின்றனர். இதேபோல் சிஐஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, என்ன பேசுவதென்று தெரியாமல் பேசுகிறார். இதற்கு முன்னர் பல மாநிலங்களில் ஐஏஎஸ்,ஐபிஎஸ் ஆக பணி புரிந்தவர்கள் ஆளுநராக பொறுப்பு வகித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ரவி, பிஹாரில் பிறந்து கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுக்குப் பின்பு நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றியவர். அவரது நியமனத்தில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை. அதிமுக பாஜக உறவு அண்ணன், தம்பி உறவு.
இவ்வாறு அவர் கூறினார்.