Published : 12 Sep 2021 03:19 AM
Last Updated : 12 Sep 2021 03:19 AM

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூரில் ரூ.102.83 கோடியில் கைத்தறி பட்டுப் பூங்கா: திட்டப் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

கீழ்கதிர்பூரில் கைத்தறி பட்டுப் பூங்கா திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி. உடன், மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உள்ளிட்டோர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூரில் கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்கும் பணிகளை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ் கீழ்கதிர்பூரில் 75 ஏக்கர் பரப்பில், ரூ.102.83 கோடியில் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு கைத்தறி நெசவு, பட்டு சாயமிடுதல், பருத்தி சாயமிடல், எம்பிராய்டரி மற்றும் கார்மென்டிங் ஆகியவற்றுக்காக 82 தொழிற் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பூங்காவில் கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், சாயமிடுவோர், வடிவமைப்பாளர்கள் என 18 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த பட்டுப் பூங்காவில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் மற்றும் தொழிற்கூடங்களில் நிலை குறித்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, "பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா பணி கடந்த 10ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்தப் பணிகளை தற்போது விரைவுபடுத்தியுள்ளோம். விரைவில் கைத்தறி பட்டுப் பூங்கா தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.

ஆய்வின்போது, கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர் பீலா ராஜேஷ், காஞ்சிபுரம்ஆட்சியர் மா.ஆர்த்தி, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், ஜி.செல்வம்,எம்எல்ஏ-க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x