

டெல்லி வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம், தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தமிழ்ப் பயிற்று மொழி மாநாட்டை புதுச்சேரியில் நேற்று நடத்தியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்து, அறிவியல் தமிழ் ஆய்வியல் அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
நிகழ்வில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது:
பிறந்த குழந்தைக்கு 6 மாத காலம் தாய்ப்பால் எவ்வளவு அவசியமோ அதேபோல் தாய்மொழியில் கற்பதும் மிகச் சிறந்ததாக அமையும். பல துறைகளில் சாதித்த அறிஞர்கள் தாய்மொழியில் கற்றவர்களாகவே இருந்துள்ளனர். அறிவியலுடன் கலந்த தமிழ் இயற்கையானது. தாய்மொழி பேச்சு இயற்கையாக அமைய வேண்டும். ஆனால், இங்கு அறிவுறுத்தி பேச வைப்பது வருத்தமளிக்கிறது. தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால் தான் புதிய கல்விக்கொள்கையை வரவேற்கிறோம். இளம் வயதில் தாய்மொழியை கற்பது அவசியமாகும்.
அதன் பிறகு பிற மொழி கற்பது அவர்களுக்கான கல்வி அறிவு விரிவடைய பயன்தரும். தமிழை அயல்நாட்டில் போற்றும் அளவில் நம்நாட்டில் போற்றவில்லை. தாய்மொழி தமிழ் அறிவியல் பூர்வமாக உயர வேண்டும். தமிழ் முதலில் வீடுகளில் தவழ வேண்டும். பிள்ளைகளுக்கு அர்த்தமுள்ள தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும். பல்துறைகளின் துணையோடு அறிவியல் தமிழ் வளர வேண்டும் என்றார்.