

திருவண்ணாமலை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயத்தை அறுவை சிகிச்சையின்றி மருத்துவர்கள் அகற்றினர்.
திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் லோகநாதன் மகன் மிதுன்(2). இவர், நேற்று முன் தினம் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு ரூபாய் நாணயத்தை தவறுதலாக விழுங்கியுள்ளார்.
இதையறிந்த, பெற்றோர் தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில், தொண்டை பகுதியில் (உணவு குழாய் தொடங்கும் இடத்தில்) ஒரு ரூபாய் நாணயம் சிக்கி கொண் டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து காது, மூக்கு, தொண்டை துறையின் தலைவர் மருத்துவர் இளஞ்செழியன் மேற்பார்வையில் சிறப்பு மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
பின்னர், அறுவை சிகச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்குமயக்கவியல் மருத்துவர்கள் ஆனந்த ராஜ், யுவராஜ் ஆகியோர் மயக்க மருந்து செலுத்தினர். அதன்பிறகு, “LARYNGOSCOPY“ முறையில் அறுவை சிகிச்சையின்றி, சிறு வனின் தொண்டை குழியில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயத்தை வெற்றிகரமாக சிறப்பு மருத்துவக் குழுவினர் அகற்றினர்.
பின்னர், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சிறுவனின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியதும், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு, பெற்றோர் நேற்று அழைத்து சென்றனர்.
பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
குழந்தைகளை வளர்த்து வரும் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக் கப்பட்டு வரும் நிலையில், பெற்றோரின் கவனக் குறைவு மற்றும் அலட்சியம் காரணமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆபத்தான நிலைக்கு சென்று வருகின்றனர். விளையாடும் குழந்தைகள் பார்வையில் தெரியும் வகையில் நாணயம் உள்ளிட்ட சிறிய பொருட்களை வைக்க வேண்டாம் என்றும், அதுபோன்ற பொருட்களை விளையாட கொடுத்து ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.