Last Updated : 26 Feb, 2016 09:22 AM

 

Published : 26 Feb 2016 09:22 AM
Last Updated : 26 Feb 2016 09:22 AM

ஒரே தொகுதியில் தொடர்ச்சியாக 4 முறை திமுக எம்எல்ஏ வெற்றி பெற்ற ரகசியம்

தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதானல்ல. அப்படியே வெற்றி பெற்றாலும் அதனை தக்க வைப்பது குதிரைக்குக் கொம்பு முளைப்பது போன்றது. கட்சி அரசியல் மோலோங்கியிருக்கும் தமிழகத்தில் தொடர் வெற்றி பெறுபவர்களை கருணாநிதி, துரைமுருகன், செங்கோட்டையன் என விரல் விட்டு எண்ணி விடலாம்.

இப்படிப்பட்ட சூழலில் திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து 4 முறை வெற்றி 20 ஆண்டுகள் எம்.எல்.ஏ. பதவியை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அர.சக்கரபாணி. தலைவர்கள் சிலர் தொடர்ந்து வெற்றி பெற்றி ருந்தாலும் அவர்கள் ஒரே தொகுதியில் போட்டியிட்டு அந்த வெற்றியை பெறவில்லை. தொகுதி மாறித்தான் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், சக்கரபாணி ஒரே தொகு தியில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றுள்ளார்.

மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக இருந்தவரை 34 வயதில் 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதி யில் களம் இறக்கினார் திமுக தலை வர் கருணாநிதி. அந்தத் தேர்தலில் வீசிய அதிமுகவுக்கு எதிரான அலை அவரை சுமார் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தது.

2001 தேர்தலில் தமிழகம் முழு வதும் அதிமுக அமோக வெற்றி பெற்றது. தென் மாவட்டங்க ளில் பெரும்பாலான திமுக வேட்பாளர்கள் பல்லாயிரக்கணக் கான வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தனர். ஆனால், ஒட்டன்சத்திரத்தில் 2-வது முறை யாக வெற்றி பெற்று அரசியலில் தனக்கான இடத்தை தக்க வைத் தார் சக்கரபாணி. 2006 பேரவைத் தேர்தலில் இவரது வெற்றி தொடர்ந்தது. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் அரசு கொறடாவாக பணியாற்றினார்.

2011 தேர்தலில் வெறும் 23 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை திமுக இழந்தது. பல மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் படுதோல்வி அடைந் தனர். ஆனாலும் 4-வது முறையாக வெற்றி பெற்று அதிமுகவினரை மட்டுமல்ல திமுகவினரையும் வியக்க வைத்தார் சக்கரபாணி.

வெற்றிக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி, பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது அங்கு வந்த கருணா நிதியின் மகள் செல்வி, ''சக்கரபாணி போல 122 பேர் இருந்தால் திமுக எப்போதும் ஆளுங்கட்சியாகவே இருக்கும்'' என பாராட்டினாராம். சட்டப்பேரவைத் தேர்தல்களில் மட்டுமல்ல 1998, 1999, 2004, 2009 மக்களவைத் தேர்தல்களிலும் திமுக கூட்டணி கட்சியாக இருந்த காங்கிரஸ், தமாகா வேட்பாளர்கள் ஒட்டன்சத்திரம் தொகுதியில் முதலிடத்தைப் பெற்றனர்.

இந்த தொடர் வெற்றியின் ரகசியம்தான் என்ன என்பதை அறிய ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் அவரை சந்தித்தோம். ‘‘1996-ல் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனதும் தொகுதியின் தீராத பிரச்சினையான குடிநீர் தட்டுப் பாட்டைப் போக்க அனைத்து கிராமங்களிலும் மேல்நிலை நீர்த் தோக்க தொட்டிகளை அமைத் தோம். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் எனக்கு நற்பெயரைத் தேடித்தந்தன. ஆட்சியில் இல்லாதபோதும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் ஏராளமான நலத் திட் டங்களை செய்துள்ளோம்.

தொகுதி மக்கள் என்னை 24 மணி நேரமும் சந்திக்க முடியும். எவ்வித தயக்கமின்றி ஒரு தந்தை மகனை அழைப்பது போல, ஒரு மகன் தந்தையை அழைப்பதுபோல நள்ளிரவு 12 மணிக்குகூட தொகுதி மக்கள் என்னுடன் பேசுகிறார்கள். அவர்கள் பிரச்சினைகளை முடிந்த அளவுக்கு தீர்வு கண்டு வருகிறேன். எனது தொகுதியில் உள்ள 475 கிராமங்களிலும் என்னைத் தெரி யாதவர்கள் யாரும் இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் என்னால் குறைந்தது 50 பேரையாவது பெயர் சொல்லி அழைக்க முடியும்.

என்னைப் பொறுத்தவரை மக்களின் அன்பைப் பெற வேண் டும். அதன் மூலம் கிடைக்கும் வெற்றி கட்சிக்கு உதவ வேண்டும். நான் வெற்றியைத் தவிர வேறு எதையும் அறுவடை செய்ய நினைக்கவில்லை. இது தான் எனது வெற்றியின் ரகசியம்’’ என்கிறார் சக்கரபாணி. ஒட்டன் சத்திரம் தொகுதியில் மீண்டும் அவர் தான் திமுக வேட்பாளர் என்பது முடிவாகி விட்டதாகவே தெரிகிறது. அதனால்தான் அங்கு அவரைத் தவிர வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை போலும்.

மக்களின் அன்பைப் பெற வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வெற்றி கட்சிக்கு உதவ வேண்டும். நான் வெற்றியைத் தவிர வேறு எதையும் அறுவடை செய்ய நினைக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x