Last Updated : 11 Sep, 2021 08:44 PM

 

Published : 11 Sep 2021 08:44 PM
Last Updated : 11 Sep 2021 08:44 PM

கடமை தவறும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை

பொன்னை

மக்கள் பணி செய்ய வேண்டிய அரசு அலுவலர்கள் தங்கள் கடமையை செய்யத் தவறினால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத் பொன்னை பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு நிவாரண பொருடங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவவலர் நரசிம்மன் வரவேற்றார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த 180 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியும், கரோனா சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:

‘கரோனா தொற்றில் இருந்த மக்கள் தங்களை பாதுகாக்க கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நான் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டேன். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டதால் எனக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நான் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பெரிய பாதிப்பு இல்லாமல் பிழைத்தேன். எனவே, 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இதற்காக தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் நாளை (இன்று) மெகா தடுப்பூசிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள நபர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். 3-வது அலையை தடுப்பதுடன், கரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசியை பயமில்லாமல் போட்டுக்கொள்ள வேண்டும்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பொன்னையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்படும் என்றும், மேம்பாலம் அமைக்கப்படும் எனக்கூறினேன். அதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பொன்னையில் கல்லூரி மற்றும் மேம்பாலம் அமைக்கப்படும். பொன்னையில் இருந்து பழைய மற்றும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தேன். அதன்படி பொன்னையில் இருந்து 10 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

திமுக என்னென்ன வாக்குறுதி அளித்ததோ அவை அனைத்தும் நிறைவேற்றுவோம். அரசு அதிகாரிகள் மக்கள் நலப்பணியில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு சில ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என புகார் எழுந்துள்ளது. பொன்னை அரசுப்பள்ளியில் கூட ஆசிரியர்கள் சரிவர வருவது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுமட்டுமின்றி பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் கூட பணிக்கு வராமல் இருப்பதாக கூறப்படுகிறது. அரசு அலுவலர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். மக்கள் நலப்பணியில் யாரெல்லாம் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடமையை மறக்கும் அரசு அலுவலர்கள் தேவைப்படால் வீட்டுக்கே அனுப்பவும் தயங்க மாட்டேன். மக்கள் தான் எஜமானர்கள்,அவர்களுக்கு சேவை செய்யவே நாம் இருக்கிறோம் என்பதை யாரும் மறக்கக்கூடாது’’.இவ்வாறு அவர் பேசினார். இம்முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x