Published : 25 Feb 2016 03:25 PM
Last Updated : 25 Feb 2016 03:25 PM

288 தமிழர்கள் விடுதலையில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

ஆந்திர சிறைகளில் இருந்து 288 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆந்திர மாநில சிறையில் வன அதிகாரிகளை கொலை செய்ததாகவும், செம்மர கட்டை கடத்தியதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 288 தமிழர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில் நியாயமும், நேர்மையும் வென்றுள்ளது.

அதே சமயத்தில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கூறி, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் தற்போதும் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த ஆண்டு அப்பாவி தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மனிதாபிமானத்தோடு பத்து லட்சம் ரூபாய் நிதியுதவியும் தேமுதிக சார்பில் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட தமிழர்களை, பெருங்குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் போல் இரும்புச் சங்கிலிகளால் பூட்டப்பட்டு அழைத்துவரப்பட்ட காட்சி காண்போர் மனதை கலங்கவைத்தது. திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றதாகவும், கட்டிட வேலைக்கு சென்றதாகவும் அப்போது அவர்கள் சென்ற பேருந்தை நிறுத்தி தமிழில் பேசினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு இந்த வழக்கில் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டோமென விடுதலையானவர்கள் கூறுகிறார்கள். மேலும் தாங்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சென்றதாகவும், ஆந்திராவின் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு செம்மர கடத்தல்காரர்கள் எனக்கூறி இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழர்கள், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்களுடைய குடும்பத்தினரையும், உறவினர்களையும், நண்பர்களையும் மீண்டும் பார்ப்போமா? என்ற மனவேதனையில் நொந்து நூலாகிப்போய் வெளியே வந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள நிர்வாக சீர்கேட்டால் வேலை வாய்ப்பு இல்லாமல் ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாத நிலையில்தான் ஆந்திராவிற்கு கூலி வேலை செய்ய சென்றோம் என அவர்கள் கூறியதையோ, அவர்கள் பட்ட வேதனையையோ, இன்னல்கள் குறித்தோ செய்திகளை வெளியிடாத தனியார் தொலைக்காட்சிகள் அவர்களை விடுதலை செய்தது தமிழக அரசு என்பது போலவும், முதல்வர் ஜெயலலிதா மட்டுமே முயற்சி எடுத்தது போலவும், அதற்கு ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லுங்கள் என்றும் வற்புறுத்துவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுப்போல் உள்ளது.

சிறையில் பல்வேறு கஷ்டங்களுக்குள்ளாகி வெளியே வந்திருக்கின்றவர்களின் வேதனையை புரிந்துகொள்ளாமல், ஜெயலலிதாவிற்கு ஆதரவாக இதில் அரசியல் ஆதாயம் தேடுவதும், ஜெயலலிதாவின் பிறந்தநாள் பரிசாக இந்த விடுதலை அமைந்துள்ளதென்று கூறுவதும் சரியா?

மேலும், அரசியல் ரீதியாக இதில் ஆதாயம் தேடும் வகையில் பல கட்சிகள் தங்களுடைய வழக்கறிஞர்களின் முயற்சியால்தான் விடுவிக்கப்பட்டனர் என உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய யாரும் முன்வருவதில்லை.

தமிழகத்தில் நடைபெறும் மோசமான நிர்வாகமும், அதனால் ஏற்பட்டுள்ள வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும்தான் ஜெயலிதாவின் ஐந்தாண்டுகால ஆட்சியின் சாதனையாகும். இந்த ஆட்சியில் நடைபெறும் அவலங்களுக்கு இந்த சம்பவமும் ஒரு சான்றாகும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x