Published : 11 Sep 2021 04:30 PM
Last Updated : 11 Sep 2021 04:30 PM

பத்திரப்பதிவு முறைகேடு குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைப்பு: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் மூர்த்தி.

மதுரை

பத்திரப்பதிவுத் துறையில் கடந்த காலத்தில் முறைகேடாக நடைபெற்ற பத்திரப்பதிவுகள் குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், எம்.பி., சு.வெங்கடேசன் மற்றும் எம்எல்ஏக்கள் இன்று (செப். 11) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பின், அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"பாரதியாரின் பெருமைகளைப் போற்றும் வகையில், தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை, அவரின் இந்த நூற்றாண்டு நினைவு தினத்தில் செய்துள்ளது. பாரதியார் இந்தப் பள்ளியில் பணியாற்றி இருப்பது, மதுரைக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது. இங்கே ஒரு சிலை அமைக்க வேண்டும் என்று நிர்வாகம் கேட்டுள்ளது. அதை ஆய்வு செய்து அரசு சார்பில் சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

தனியார், பெரிய தொழில் அதிபர்கள் கடன் பெறுவதற்கு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கே வராமல் ஆன்லைன் மூலமே சொத்துகளைப் பதிவு செய்வதற்கு திட்டம் வருகிறது. கடந்த காலத்தில் முறைகேடாகப் பத்திரப்பதிவு நடந்துள்ளதாகப் பல ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.

மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் சொத்துகளை விசாரிக்க உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இனி முறைகேடாகப் பத்திரப்பதிவு நடந்தால் சார்பதிவாளர் மட்டுமல்லாது அவருடன் தொடர்புள்ள அதிகாரிகள் மீதும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர், அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதுபோல், முறைகேடான சொத்துகள் பதிவுக்குத் துணைபோகும் ஆவண எழுத்தர்கள் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெறுவார்கள்.

அதுபோல், பத்திரப்பதிவு வழிகாட்டு மதிப்பு முறைகேடு நடந்துள்ளது. விவசாய நிலங்கள், முறைகேடாக மனை நிலங்களாக மாற்றி விற்கப்பட்டுள்ளன. இவையும் ஆய்வுசெய்து சரி செய்யப்படும். தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் தெருவுக்கு தெரு வழிகாட்டி மதிப்புகள் மாறுபடுகின்றன. அதையும் மறுசீரமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

ஒரு சார்பதிவாளர் பதிவு செய்த சொத்துகளை ரத்து செய்யும் அதிகாரம் பத்திரப்பதிவுத் துறைக்குக் கிடையாது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பரிந்துரை செய்யும் அதிகாரம் மட்டுமே பத்திரப்பதிவுத் துறைக்கு உள்ளது. அதனால், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து அதற்குத் தீர்ப்பு வர பல ஆண்டுகளாகிவிடுகின்றன.

அதனால், பத்திரப்பதிவில் தவறு நடந்தது கண்டறியப்பட்டால், அந்தச் சொத்துகளை ரத்து செய்யும் அதிகாரத்தைப் பத்திரப்பதிவுத் துறைக்குக் கொடுக்க சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்ததும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிடும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தவறுகள் நடப்பது குறையும்".

இவ்வாறு அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x