மகாகவி பாரதிக்குத் தமிழகத்தில் உரிய கவுரவம் கிடைக்க வேண்டும்: சத்குரு

மகாகவி பாரதிக்குத் தமிழகத்தில் உரிய கவுரவம் கிடைக்க வேண்டும்: சத்குரு
Updated on
1 min read

நவீன தமிழ் இலக்கியத்தின் குரலாகவும் முகமாகவும் திகழும் மகாகவி பாரதிக்குத் தமிழகத்தில் உரிய கவுரவம் கிடைக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு நாளை முன்னிட்டு சத்குரு, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தன் வாழ்நாள் சிறிதெனினும் ஆற்றல் வாய்ந்த விதத்தில் தாக்கம் ஏற்படுத்திய சுப்ரமணிய பாரதி, நவீன தமிழ் இலக்கியத்தின் குரலாகவும் முகமாகவும் ஆனவர். அளப்பரிய திறன் கொண்ட அவர் கலாச்சார, இலக்கிய, ஆன்மிக & அரசியல் தளங்களில் மேற்கொண்ட சீர்திருத்த முயற்சிகளுக்காக மதிப்புடன் போற்றப்படுபவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், பதிவுடன் சேர்த்து சத்குரு வெளியிட்டுள்ள வீடியோவில்,

துன்பம் இல்லாத நிலையே சக்தி

தூக்கம் இல்லாத கண் விழிப்பே சக்தி

அன்பு கனிந்த கனிவே சக்தி

இப்படி பாடிய பாரதி யோகிதானே?

யோகத்தின் ஏதாவது ஒரு அம்சம் அவரின் உணர்விலும் அனுவபத்திலும் வந்ததால்தானே இதுபோன்ற வரிகள் வெளிவர முடியும்?

கனவை உண்மையாக்குவதும், உண்மையைக் கனவு போல் காண்பதும், தூக்கத்தில் விழிப்பாக இருப்பதும், விழிப்பில் தூக்கம் போன்ற உணர்வை உடல் உணர்வதும் யோகாவின் அம்சங்கள்.

இதுபோன்ற அனுபவங்கள் மனிதனுக்கு ஏதோ ஒரு வகையில் தொட்டு இருந்தால்தான் இதுபோன்ற அற்புதமான வரிகள் கவிதையாக வெளிப்படும்.

இத்தகைய மகாகவிக்குத் தமிழகத்தில் தேவையான கவுரவம் கிடைக்க வேண்டும். அவருடைய கவிதைகளைத் தமிழ் மக்கள் மறுபடியும் பாட வேண்டும். எல்லா இடங்களிலும் அவர் கவிதைகள் ஒலிக்க வேண்டும். யோகா என்பது ஒரு பயிற்சி அல்ல. அது ஒரு உள் அனுபவம். இந்த அனுபவத்தைப் பெறுவது எல்லா மனிதர்களுக்கும் சாத்தியம்.

ஒரு மனிதர் எந்தச் செயல் செய்தாலும் அதில் ‘நான்’ என்ற தன்மையைக் கரைத்து முழு ஈடுபாடாகச் செய்தால் இந்த யோக அனுபத்தை அடைய முடியும். இதுதான் நன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை. மனிதனின் முக்திக்கும் அடிப்படை” என்று சத்குரு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in