Last Updated : 11 Sep, 2021 04:37 PM

 

Published : 11 Sep 2021 04:37 PM
Last Updated : 11 Sep 2021 04:37 PM

கடுமையான நடவடிக்கை; கரோனா தடுப்பூசி போட வேண்டும்: புதுவை ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை

புதுச்சேரி சுகாதாரத்துறை தேசிய தடுப்பூசி திட்டத்தில், நியூமோகாக்கல் கிருமியிலிருந்து இளம் சிறார்களைப் பாதுகாக்க நியூமோகாக்கல் தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் தடுப்பூசியை இளம் சிறார்களுக்கு உரிய காலத்தில் வழங்குவதன் மூலம் நியூமோகாக்கல் நியூமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்க முடியும்.

இத்தடுப்பூசிக்கான தொடக்க விழா இன்று (செப். 11) ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் எம்எல்ஏ கேஎஸ்பி.ரமேஷ், சுகாதாரத்துறைச் செயலர் அருண், இயக்குநர் ஸ்ரீராமலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘அரசு மருத்துவமனையில் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள நியூமோகாக்கல் தடுப்பூசி இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. இது இந்தியக் குழந்தைகள் சிகிச்சை வரலாற்றில் ஒரு புரட்சியாகும். இதைப் புதுச்சேரி அரசும், சுகாதாரத்துறையும் முன்னெடுத்துச் சென்றதற்காகப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகள் நியூமோகாக்கல் நிமோனியாவால் இறப்பது இந்தியாவில் அதிகம். இது குறைக்கப்பட வேண்டும், தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக முதலில் ஒன்றரை மாதம், பிறகு மூன்றரை மாதம், அதன் பிறகு 9-வது மாதம் இந்தத் தடுப்பூசி போட வேண்டும். இதனைத் தாய்மார்கள் குறித்துக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வருங்காலத்தில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் சூழ்நிலையில் இந்தியா உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் எப்படி போலியோவுக்கு சொட்டு மருந்து கண்டுபிடித்துள்ளதோ, அதேமாதிரி கரோனாவுக்கும் தடுப்பு சொட்டு மருந்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறது.

அவை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் நமக்கு ஊசி, அதற்கான உபகரணங்கள் தேவையில்லை. வெகுவிரைவில் அனைத்துக் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கரோனா தடுப்பு சொட்டு மருந்து கொடுத்துவிடலாம். இதிலும் இந்தியா முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. மருத்துவத்துறையில் இன்னும் பல முன்னேற்றங்களைச் செய்ய வேண்டும்.

இரு தினங்களுக்கு முன்பு கோவா முதல்வரைச் சந்தித்தேன். அப்போது, கோவா 100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக மாறிவிட்டதாகக் கூறினார். அவர்களைப் பிரதமரும் பாராட்டியுள்ளார். புதுச்சேரியில் 65 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி போட்டுள்ளோம். ஆனால், வெகுவிரைவில் 100 சதவீதத்தை எட்டும் வகையில் சுகாதாரத்துறை மிகத் தீவிரமாகக் கடுமையாகப் பணியாற்ற வேண்டும்.

கனடா போன்ற நாடுகளில் நான்காவது அலை வந்துவிட்டது. அதை அவர்கள் தைரியமாக எதிர்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் தடுப்பூசி போட்டுவிட்டனர். சில கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தடுப்பூசி போடாதவர்களுக்குக் கட்டாய விடுமுறை அளிக்கப்படும் நிலை உள்ளது.

தடுப்பூசி போடுவது அவர்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, மற்றவர்களைப் பாதுகாப்பதற்கும்தான். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற அரசு செலவு செய்கிறது. மனித நாட்கள் வீணாகின்றன. தடுப்பூசி போட்டால் ஐசியூ தேவையில்லை. அதனால் விடுபட்டவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தவம் செய்தால் எல்லாவற்றையும் முழுமையாக அடைந்துவிடலாம் என்று பாரதியார் கூறியுள்ளார். தடுப்பூசியை முழுமையாக அடைந்த மாநிலமாக புதுச்சேரி மாற வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பம். அதனால் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் புதுச்சேரி 100 நூறு சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலம் என்ற திட்டத்தைச் செயலாற்ற வேண்டும்’’.

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

இதனிடையே, ‘‘இந்தத் தடுப்பூசி 6 வாரம், 14 வாரம் மற்றும் 9 மாதக் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வியாழக்கிழமை தோறும் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம்’’ என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x