

அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் மாபெறும் கரோனா வைரஸ் தடுப்பூசி முகாமுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டத்தில் நாளை (செப் 12) 400 இடங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் மூலம் 40,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முகாம்களுக்கான ஏற்பாடுகளையும், தடுப்பூசி இருப்பு குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.எஸ்.கந்தசாமி, பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் வாலாஜாநகரம் சமுதாயக்கூடத்தில் முன்களப்பணியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்ட தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.எஸ்.கந்தசாமி, தடுப்பூசி முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
மேலும், சிறப்பு முகாம்களில் அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் மற்றும் நிழல் தரும் வகையில் பந்தல் அமைக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, நகராட்சி ஆணையர் (பொ) தமயந்தி உட்பட பலரும் உடனிருந்தனர்.