புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 78,000 பேருக்கு கரோனா தடுப்பூசி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறார் ஆட்சியர் கவிதா ராமு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறார் ஆட்சியர் கவிதா ராமு.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (செப்.12-ம் தேதி) நடத்தப்படும் சிறப்பு முகாம் மூலம் 78 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னணி மாவட்டங்களில் ஒன்றாகப் புதுக்கோட்டை உள்ளது. அதன்படி, தமிழகத்திலேயே முதல் முதலாக மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கு மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, ஆசிரியர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களில் பெரும்பாலானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 50-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டதால், அந்த ஊராட்சித் தலைவர்கள் அண்மையில் பாராட்டப்பட்டனர்.

இதற்கு அடுத்தகட்டமாக தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தைப் பிடிப்பதற்கான திட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக செப்.12-ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அறந்தாங்கி மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் கலைவாணி , ‘இந்து தமிழ்’ இணையதளத்திடம் கூறும்போது, ’’ஆட்சியரின் ஆலோசனையுடன் கரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் செப்.12-ம் தேதி கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக பள்ளி, அங்கன்வாடி, பொதுப் போக்குவரத்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படுவதைப் போன்று கரோனா தடுப்பூசி செலுத்தவும் அன்றைய தினம் 750 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இதை, அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்.12-ம் தேதி மட்டும் 78 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் இந்த முகாமை அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்.

எவர்சில்வர் தட்டு இலவசம்

கந்தர்வக்கோட்டை வட்டத்தில் 43 இடங்களில் சுமார் 4,300 பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில், தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு தலா ஒரு எவர்சில்வர் தட்டு வழங்கப்பட உள்ளது என கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் புவியரசன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in