பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தும் மத்திய அரசு: ப.சிதம்பரம் கண்டனம்

ப.சிதம்பரம்: கோப்புப்படம்
ப.சிதம்பரம்: கோப்புப்படம்
Updated on
1 min read

70 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு மூடுவிழா நடத்த முடிவு செய்திருப்பதை வன்மையாக கண்டிப்பதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு 'தேசிய பணமாக்கல் திட்டம்' என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், மின் உற்பத்தி, மின் விநியோகம், இயற்கை எரிவாயு குழாய், விளையாட்டு மைதானங்கள், ரியல் எஸ்டேட் என அரசு கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு போகவுள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டதும்,
'நாடு விற்கப்படுகிறது' என்று எதிர்கட்சிகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 'நாட்டின் சொத்துகள் எதையும் நாங்கள் விற்கவில்லை. குறுகிய கால அளவிலான குத்தகைக்குதான் விடுகிறோம்' என்று மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று (செப். 10) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "70 ஆண்டுகளாக மத்திய அரசு நிர்வகித்து வந்த பொதுத்துறை நிறுவனங்கள், பொதுச்சொத்துக்களை மொத்த விலைக்கு விற்கப் போகின்றனர். பண்டிகை காலங்களில் 'கிராண்ட் சேல்', 'கிராண்ட் க்ளோசிங் சேல்' என நடத்துவது போல, பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு மூடுவிழா நடத்த முடிவு செய்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்" என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in