

சாத்தூர் அருகே தாயில்பட்டியில் வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவை சேர்ந்த பாலமுருகன் (55), என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சட்ட விரோதமாக இன்று (செப். 10) பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், இந்த பட்டாசு தயாரிப்பின்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சார்ந்த சண்முகராஜ் (52), செல்வி (35), முத்துச்செல்வி (35) உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த ரொம்பகோட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தனியார் தண்ணீர் வாகனத்தின் உதவியுடன் தீயை அணைத்தனர். இதையடுத்து இந்த வெடி விபத்தில் காயமடைந்த முத்துச்செல்வி, செல்வி உள்ளிட்டோர் லேசான காயத்துடன் தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பலத்த காயமடைந்த சண்முகராஜ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.