‘‘தமிழ்நாடு வரவேற்கிறது’’- புதிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆர்.என். ரவி வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும், தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது எனக் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பிஹாரில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம், சில காலம் பத்திரிகைத் துறை பணி என இருந்தவர் கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஆகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். உளவுத்துறையிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
2012 இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளைத் தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார்.
பின்னர் அவர் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவிக்கு எனது வணக்கமும் வாழ்த்தும். தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்!. தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது’’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இதுபோலவே தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் பன்வாரிலால் புரோகித்துக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
