

சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் 8-ம் தேதி மாலை நடந்தது. அதற்கு பதில் அளித்து பேசியபோது, துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகம் வழங்குவதை நோக்கமாக கொண்டு, மின்னாளுகையை அனைத்து நிலைகளிலும் புகுத்தும் வகையில் ‘டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்’ செயல்படுத்தப்படும். மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டஅரசு துறைகளின் செயல்பாடுகள் படிப்படியாக மின்மயமாக்கப்படும். டேட்டா அனலிடிக்ஸ், மெஷின் லேர்னிங் மூலம் கொள்கை வகுத்தல் மற்றும் அதை திறம்பட செயல்படுத்துவதற்கான முடிவுகளை எடுக்க உதவும் வகையில் ரூ.10 கோடியில் கொள்கை முடிவுகளுக்கான ஆதரவு அமைப்பு செயல்படுத்தப்படும்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் ரூ.7.5 கோடியில் மெய்நிகர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். பார்வை, கற்றல், வாசிப்பில் குறைபாடு உடையவர்கள், முதியோர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் ரூ.1 கோடியில்உள்ளடக்க தமிழ் மின்-நூலகம் உருவாக்கப்படும். 2, 3-ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.