

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற பொதுமக்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்து அமைப்பினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்துவார்கள். பின்னர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், விழா கொண்டாடவும் அனுமதி இல்லை. தனி நபர்கள் தங்களது இல்லங்களிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.
தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தனி நபராக எடுத்துச் சென்று அருகிலுள்ள ஆலயங்களில் வைக்கலாம். அச்சிலைகளை கரைக்க அறநிலையத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுநடைமுறையில் உள்ள சமூக இடைவெளி மற்றும் இதர கட்டுப்பாடுகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்லும்பொதுமக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,சென்னை பெருநகர் முழுவதும் காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் கூடுதல் காவல் ஆணையர்கள் செந்தில் குமார், கண்ணன்மற்றும் இணை, துணை ஆணையர்கள்தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரோந்து போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விழிப்புடன் பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.