Published : 09 Sep 2021 09:07 PM
Last Updated : 09 Sep 2021 09:07 PM

திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடை அக்டோபர் 31 வரை நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடையை அக்டோபர் 31 வரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

தமிழகத்தில் அன்றாடம் சுமார் 1600 புதிய நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் தினசரி எண்ணிக்கை சற்று உயர்ந்தும் காணப்படுகிறது.

மேலும், அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் ஏற்படாதவாறு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்துடனான பேருந்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்துவரும் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு தடைகள் தொடகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் நோய்த் தொற்று தீவிரமாக பரப்பக்கூடிய நிகழ்வுகளாக மாறக்கூடும்.

எனவே கரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் அதிகரித்து வரும் கரோனா மட்டுமின்றி நிபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி, அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுகிறது.

தடுப்பூசி நடவடிக்கை:

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தத் தகுதியுள்ள நபர்களில் சுமார் 12 சதவீதம் நபர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 45% மக்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினந்தோறும் மூன்று லட்சம் தடுப்பூசி என்ற அளவில் இருந்ததை தற்போது 5 லட்சம் என்று அதிகரித்துள்ளோம்

தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகள்:

தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகள் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தொற்று சூழலில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மட்டும் உரிய சமூக இடைவெளியைக் கடைபிடித்து மாலை அணிவிக்க அனுமதிக்கப்படுகிறது. மரியாதை செலுத்தப்படும் தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்கள் மிகாமல், பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் 5 நபர்களுக்கு மிகாமல் சம்பந்தப்பட்ட ஆட்சித் தலைவரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான அனுமதியைப் பெற்று அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய சமூக இடைவெளியைக் கடைபிடித்து மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மக்களுக்கு வேண்டுகோள்:

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், மூன்றாம் அலை ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் பொது மக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடுமாறும் பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பயன்படுத்துமாறும் கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x